சென்னை: கீழ்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தான் பணிபுரியும் மருத்துவமனையில் தன்னுடைய அறையிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில், இன்று காலை (ஜனவரி 17) தனது அறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கீழ்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், தற்போது அந்த பெண் துபாயில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்டவருக்கு வரும் ஏப்ரல் மாதம் வேறு ஒரு பெண்ணுடன், திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் காதலித்து வந்த பெண்ணிடம் உறவை முறித்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் காதலித்த பெண்ணுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு அனுப்பியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் அந்நபர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி