மக்களவைத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை காண்டம் முடிந்து தற்போது பரப்புரை காண்டம் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் மக்களவைத் தொகுதியில் களமிறங்குகிறார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே அவருக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி பேசும் வீடியோ ஒன்று வெளியானது. இதனையடுத்து ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி பரப்புரை மேற்கொள்கிறார் எனவும், வரும் நாட்களில் களத்துக்கு வந்தே பரப்புரை மேற்கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இந்தத் தேர்தலில் பரப்புரையில் ஈடுபட உள்ளதாகச் சில தகவல்கள் வெளியாகின்றன. உண்மையாகவே நான் பரப்புரையில் ஈடுபடவில்லை. இந்தத் தேர்தலில் வாக்காளராக மட்டுமே பங்கேற்கிறேன்” என விளக்கமளித்திருக்கிறார்.