தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் அதிமுக, அமமுக கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பேரணி மற்றும் அஞ்சலிக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில், இன்று அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அண்ணா சிலையில் தொடங்கி ஜெயலலிதாவின் நினைவகம் வரை இந்த ஊர்வலம் சென்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா பாடிய சோகப் பாடல் பின்னணியில் ஒலிபரப்பப்பட்டது.
பின்னர், தினகரன் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலம் நடந்து முடிந்து ஒரு மணி நேரத்திற்குப் பின்பு, அமமுக ஊர்வலம் தொடங்கியது.
இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!