இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும், இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தி தரப்படும்,
மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதிகளை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் இவை அனைத்தும் கடந்த ஐந்தாண்டு காலத்தில் பொய்த்துப்போய்விட்டது. தற்போது தன்னை காவலாளி என்று தெரிவித்துக்கொள்கிறார். அம்பானி, அதானி போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர் பாதுகாவலராக உள்ளார். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி மிக அருமையான தேர்தல் அறிக்கையை அளித்துள்ளது.
சிறுபான்மையினர் ஆணையத்திற்கு அரசியல் சட்டத்தினுடைய அந்தஸ்து வழங்கப்படும் என்று எல்லாம் மிகச்சிறப்பான திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. விவசாயிகளுடைய கடன்கள், மாணவர்களுடைய கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்பது வரவேற்கத்தக்க அம்சம்.
ஏழைகளுக்கு 72,000 ரூபாய் வழங்கப்படும் என்பது செயல்படுத்தக்கூடியது. அதேபோல் கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவந்து நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை தமிழ்நாட்டில் வீசிக்கொண்டிருக்கிறது” என்றார்.