தமிழ்நாட்டில் பாஜகவைவிட பலம் வாய்ந்த கட்சிகளான பாமகவும், தேமுதிகவும் இன்னும் கூட்டணியையே இறுதி செய்யாத நிலையில், அதிமுகவுடனான பாஜக தேசியத் தலைவர்களின் தொடர் சந்திப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் தமிழக வருகையின்போது தொகுதிப் பங்கீடே உறுதி செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக வரும் 30 ஆம் தேதி தமிழகம் வரும் நட்டா, மதுரையில் தேர்தல் பணிகள் குறித்து பாஜக சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். அடுத்த நாள் ஆர்எஸ்எஸ் மற்றும் சமுதாயத் தலைவர்களை சந்தித்து முடித்த பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னணித் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், அன்றே தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பரில் அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்க, தமிழகம் வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனியே சந்தித்தார். அப்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு 50 தொகுதிகள் ஒதுக்க அவர் நிர்பந்தித்ததாகவும், அதற்கு அதிமுக தரப்பில், 25 அல்லது 30 தொகுதிகள் வரை ஒதுக்க பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
அதன் பின்னர், துக்ளக் இதழ் ஆண்டு விழாவில், ஜனவரி 14 அன்று அமித் ஷா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. பின்னர் அந்நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் நட்டா கலந்து கொண்டார். விழாவில் பேசிய நட்டா, தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்றார். இதனால் அமித்ஷாவுடனான கடந்த சந்திப்பு சுமூகமாக இல்லை என்பதை அதிமுக தலைவர்களே புரிந்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார். அச்சந்திப்பில் அரசியல் இல்லை என முதலமைச்சர் கூறினாலும், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கான தொகுதிப் பங்கீடு ஒரு நிலைக்கு வந்துவிட்டதாகவே பத்திரிகையாளர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, பாஜகவின் தமிழ் மாநில பொறுப்பாளரான சி.டி. ரவி இன்று, அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் எனக் கூறியுள்ளார். இது பற்றி பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜனிடம் நாம் பேசியபோது, முதலமைச்சரை நட்டா சந்திக்க வாய்ப்பு குறைவு என்றாலும், தொகுதிப் பங்கீடு குறித்து அவர் பேச வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவித்தார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக, வெறும் 2.02% வாக்குகளையே பெற்றது. அதே போல, 2011 ஆம் ஆண்டு தேர்தலில் 2.22% ம், மத்தியில் ஆட்சிக்கு வந்தபின், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 2.84% வாக்குகளையே பெற்றது. ஆனாலும், கூட்டணியில் பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கவுள்ள இடங்கள் குறித்து கசியும் தகவல்கள், வியப்பாகவும் மலைப்பாகவுமே இருக்கின்றன. நமக்கல்ல, அதிமுக கூட்டணி பேசக் காத்திருக்கும் பாமகவிற்கும், தேமுதிகவிற்கும். முக்கியமாக ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கும்.
இதையும் படிங்க: சிறுபான்மையினருக்கான அரசு அதிமுக அரசு: முதலமைச்சர் பழனிசாமி!