சென்னை ஐஐடியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப், கடந்த நவம்பர் 8ஆம் தேதி தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியர்கள் சிலர் அளித்த மத ரீதியான துன்புறுத்தலால்தான் தற்கொலை முடிவுக்கு வந்ததாக ஃபாத்திமா தன் செல்ஃபோனில் குறிப்பு எழுதி வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஐஐடி பேராசிரியர்களின் மத பாகுபாட்டைக் கண்டித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை ஐஐடி வளாகத்தின் நுழைவு வாயிலில் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், மத்தியப் பல்கலைக்கழகங்களில் தலித் மற்றும் இசுலாமிய மாணவர்கள் மீது ஆர்எஸ்எஸ் சிந்தனையுள்ள ஆசிரியர்கள் மூலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அரசு ரோஹித் வெமுலாவை கொலை செய்தது போல், சென்னை ஐஐடியில் மாணவி ஃபாத்திமாவையும் படுகொலை செய்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மாணவி ஃபாத்திமா கடந்த 28 நாட்களுக்கும் மேலாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனால் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளார் என்றும், அதன் விளைவாகவே தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகளவில் நடப்பதால், தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பியதாக ஃபாத்திமாவின் தாயார் தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், அந்த தாயாரின் நம்பிக்கையை பாஜக அரசும், ஆர்எஸ்எஸ் சிந்தனைவாதிகளும் உடைத்தெறிந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.