சென்னை: அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய 5 இடங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு 57 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் (அதி நவீன சிசிடிவி கேமரா) பொருத்தப்பட்டது. இந்த கேமராக்களில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப வசதியை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று பார்வையிட்டு தொடக்கி வைத்தார்.
இதன்மூலம் போக்குவரத்து விதியை மீறும் வாகனங்களின் பதிவு எண்கள் உடனடியாக படம் பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணிணிகள் மூலம் வாகன ஓட்டியின் செல்போன் எண்ணுக்கு அபராதம் கட்டுமாறு செலான் அனுப்பப்படும்.
இனி தப்பிக்க முடியாது
இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "தற்போது தேசிய தகவல் மையத்துடன் இந்த கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலமாக வெள்ளை கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்துவது, சிகப்பு விளக்கை மீறி வாகனத்தை இயக்குவது,
அதிவேகமாக வாகனத்தை இயக்குவது, தவறான திசையில் வாகனத்தை இயக்குவது ஆகிய 4 போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
எதிர்காலத்தில் விரிவடையும் திட்டம்
இந்த அதி நவீன முறைப்படி எதிர்காலத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஒரே வாகனத்தில் மூன்று பேருக்கு மேல் செல்பவர்கள் என பல்வேறு விதி மீறல்களில் ஈடுபடுவர்களுக்கும் அபராதம் விதிக்கும் முறை இணைக்கப்படும். சென்னையில் உள்ள ஆயிரத்து 700 ஜன்சன்களிலும் ஏ.என்.பி.ஆர் கேமரா வசதியை ஏற்படுத்தும் திட்டம் உள்ளது.
சென்னையில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லட்சம் சிசிடிவி கேமராக்களின் பராமரிப்பிற்கு, அதில் சிம்கார்டை பொருத்தி பழுதாகக்கூடிய கேமராக்களின் விபரங்களை ஜிபிஎஸ் மூலம் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தொழில் நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர் ஒருவரை தனியாக நியமிக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.
ஏடிஎம் கொள்ளை வழக்கு
மேலும் பேசிய அவர், "எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 4 பேரை கைது செய்ய ஹரியானவில் தனிப்படை காவல் துறையினர் முகாமிட்டுள்ளனர்.
இதுவரை 4.5 லட்சம் ரூபாய் பணம், நான்கு சக்கர வாகனம், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்களின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: காவல் துறையினரிடம் தகராறில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு - சென்னை பெருநகர காவல் ஆணையர்