சென்னை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை அடுத்த மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி(பட்டியலின பெண்) உடல் நலக்குறைவு காரணமாக 2020ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் பாதையில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால், பொதுப்பாதையில் உடலை எடுத்துச் செல்ல முயன்றனர். இதனால் இரு சமூகத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தலையிட்டு மாற்றுப்பாதையில் உடல் கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியாகவே, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காகவே மாற்றுப்பாதையில் உடலை கொண்டு சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை குறிப்பிட்ட ஆணையம், இந்த வழக்கில் மனித உரிமை மீறப்பட்டது நிரூபணமாகி உள்ளது. ஆகவே உயிரிழந்த நாகலட்சுமியின் கணவருக்கு 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். சாதி மத மோதலின் போது, மனித உரிமைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் சமத்துவ மயானங்களை அமைக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்காத காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்தினருக்கும் பயிற்சி அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைகளில் அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்க - மாநில மனித உரிமைகள் ஆணையம்!