சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக 2015ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட பிச்சுமணி என்பவர், தீவிர சிகிச்சை பலனளிக்காததால், அக்டோபர் மாதம் உயிரிழந்தார். இதனிடையே அவரது மகன் தனது மாமனாரான கோவையை சேர்ந்த மருத்துவர் எஸ்.ராதாகிருஷ்ணனிடம் தந்தை உயிருடன் இருப்பதாக போலியாக மருத்துவ சான்று பெற்றார்.
அதன் மூலம் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 19 சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். இதனால், பிச்சுமணியின் இரண்டாவது மகள் ஸ்ரீசுபிதா இந்திய மருத்துவ ஆணையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையிலான விசாரணையை தொடர்ந்து, ராதாகிருஷ்ணனின் மருத்துவர் பதிவை மாநில மருத்துவ கவுன்சில் இரண்டு ஆண்டுகளுக்கு நீக்கம் செய்தது.
இதை எதிர்த்து ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தனது மருமகன் பெயரில் சொத்துகளை பதிவு செய்யும் உள்நோக்கத்துடன், உயிரிழந்தவர் நலமுடன் இருக்கிறார் என்று போலியாக சான்றிதழ் வழங்கியதை தீவிரமானதாகத்தாக கருத வேண்டும். ஆகவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்து, அமெரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிறப்பு மருத்துவ படிப்புகளை முடித்ததன் மூலம் ராதாகிருஷ்ணன் பெற்ற நன்மதிப்பை, ரியல் எஸ்டேட் துறையில் பெருகிவரும் நிலத்தின் மதிப்பு கெடுத்துவிட்டது என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் போலி நகை கொடுத்து மோசடி.. போலீசாரின் மனைவிக்கு வலைவீச்சு