சென்னை:சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சென்னை ஐஐடி வளாகத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 19,20,21 ஆகிய தேதிகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 700 பேருக்கு நேற்று வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் இதுவரை 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அங்கேயே தனிமைப்படுத்திக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.சென்னை ஐஐடியில் விடுதி மூலம் தொற்று பரவியுள்ளது, மேலும் ஐஐடியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்த வேண்டும், வெப்பமானி மூலம் தொடர் பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்:பொது மக்களும் தங்களின் மீது அக்கறையுடன் முக கவசம் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் வேலை செய்யும் இடங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா? என்பதை மண்டல அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும்.
வெளி மாநிலங்களில், வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் சுய மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று இருப்பவர்கள் அதிகமாக மருத்துவமனைக்கு வருவதால் மருத்துவமனை உழியர்களுக்க்கு உரிய கட்டுப்பாட்டுடன் செயல்பட அறிவுறுத்தி உள்ளோம். தமிழ்நாட்டில் 1.8 லட்சம் படுக்கைகள் கரோனா உச்சத்திலிருந்த போது தயாராக இருந்தது.
தற்போது 1.1 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இதில் 18 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐ சி யு வில் இரண்டு பேர், ஆக்சிஜன் வசதியுடன் 7 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதுவரை அறிகுறி இல்லாமல் 238 பேர் வீட்டுத்தனிமையில் உள்ளனர்.
இதையும் படிங்க:மே8 மெகா தடுப்பூசி முகாம்; குழுவாக வரும் வடமாநில தொழிலாளர்கள்- மா.சுப்பிரமணியன்!