பிராட்வே முத்தியால்பேட்டை பகுதி குப்பைத் தொட்டியில் இருந்து, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை, கடந்த 14.7.2020 அன்று காவல் துறையினர் மீட்டனர்.
பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. 1.6 கிலோ கிராம் எடையுடன் குறைமாதமாக பிறந்த அக்குழந்தைக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் வழங்கப்பட்டது. தற்போது அக்குழந்தை நோய்த்தொற்று குணமடைந்து எடை சீராகவும், உடல் நலத்துடனும் உள்ளது.
தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படும் வகையில், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவிடம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் குழந்தை இன்று (ஜூலை28) ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக குழந்தைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முத்தமிழ்ச்செல்வன் என்று பெயரிட்டு வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ” தற்போது நலமுடன் இருக்கும் இந்தக் குழந்தையை மீட்டு எடுத்த காவல் துறையினர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 23 மாவட்டங்களில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 68 ஆயிரத்து 421 குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டுள்ளது “ என்றார்.
இதையும் படிங்க: சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கரோனா பாதிப்பு!