பருவமழை நெருங்குவதையொட்டி பொது சுகாதாரத்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட துணை இயக்குநர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ”வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மின்சார வசதிக்காக ஜெனரேட்டர்களையும், டீசலையும் கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவமனைகளில் மின்சாரத் துண்டிப்பு ஏற்படக்கூடும் என்பதால், டார்ச் லைட், செல்போஃன் சார்ஜர் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். பேரிடர் நேரத்தில் பணிபுரிவதற்கு ஏதுவாக மருத்துவர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பள்ளத்தாக்கான பகுதிகள், தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகள், புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வருவாய் மற்றும் பிறத்துறைகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து குடிநீரில் குளோரின் கலப்பது, திடக்கழிவு மேலாண்மை, கிருமி நாசினி தெளித்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். தேவையான அளவு ஆக்சிஜன் சிலிண்டர், மருந்து மாத்திரைகள், குடிநீர் வசதி தடையின்றி கிடைக்க சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்களும், பணியாளர்களும் பணியில் இருக்க வேண்டும். நடமாடும் மருத்துவக்குழு வாகனம் அனைத்து ஒன்றியத்திலும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறையினரால் அளிக்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளை உடனடியாக துவக்க வேண்டும்.
மழைக்காலத்தில், பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டால் அவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் காலை, மாலை இருவேளையும் மருந்து தெளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு