கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் மே 7ஆம் தேதி திறக்கப்படுவதை எதிர்த்து ராம்குமார் ஆதித்யன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யாநாராயணா அமர்வில் விசாரனைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மதுக் கடைகளை திறந்தால் நோய் தொற்று பெருமளவில் பெறுவதற்கு காரணமாக அமைந்துவிடும், மதுபானம் அத்தியாவசிய பொருள் அல்ல, டாஸ்மாக் கடைகள் நோய் தொற்று பரவும் முக்கிய மையமாக மாறிவிடும், சட்டம்-ஒழுங்கு பெருமளவில் பாதிக்கப்படும்.
உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாமல் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்துவிட்டார்கள் என்பதை காரணம் கூறி அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அதிலிருந்து விடுபட்டுள்ள நிலையில் மதுக்கடைகளை திறப்பது அவர்களை மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும்.
மருத்துவரீதியாக தற்போது மதுக் கடைகள் திறப்பது உகந்ததல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில் அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள 17ஆம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. மதுக்கடைகளில் பெருமளவில் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளிவிட்டு மதுபானங்களை வாங்குவதற்கான விரிவான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
* சமூக இடைவெளிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
* ஆன்லைனில் பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கினால் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 750 மிலி அளவில் 2 பாட்டில்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.
* கடைகளுக்கு நேரடியாக சென்று வாங்கும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு 750 மிலி 1 பாட்டில் வீதம் டோக்கன் முறையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
* மது வாங்கியவரின் பெயர், ஆதார் எண், முகவரி, சேகரிக்க வேண்டும்.
* ஒருமுறை வாங்கியவருக்கு அடுத்த மூன்று நாட்கள் இடைவெளிக்கு பிறகே மீண்டும் மது வாங்க அனுமதிக்க வேண்டும்.
* வாடிக்கையாளரின் மதுவுக்கான ரசீது கண்டிப்பாக வழங்க வேண்டும்.
* விதிமுறை மீறும் மதுக்கடைகளை நீதிமன்றம் தொடர்ந்த கண்கானிக்கும், விதிமுறை மீறினால் கடைகள் உடனடியாக மூட நேரிடும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் மே 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.