இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநர் தடுத்து முடக்குவது மக்களாட்சி தத்துவத்தின் மகத்துவத்தையே தகர்க்கும் கொடுஞ்செயலாகும். நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலத் தகுதி பெறுவது முற்றாக அற்றுப்போய்விட்டது மட்டுமின்றி, ஒவ்வொராண்டும் நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டும், அதனை அங்கீகரிக்காது கள்ள மௌனம் சாதித்திடும் ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கு மிகப்பெரும் ஐனநாயகப் படுகொலையாகும். ஏற்கனவே, ஏழு தமிழர் விடுதலை குறித்தான மாநில அரசின் முடிவிற்கு மாறாக, மௌனம் காத்து விடுதலைக்கோப்பில் கையெழுத்திட மறுத்து வரும் ஆளுநர், தற்போது மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டிலும் காலதாமதம் செய்வதென்பது தமிழக மக்களின் உணர்வுகளை உரசிப் பார்ப்பதாக உள்ளது.
முதலமைச்சரும், 5 அமைச்சர்களும் நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகும்கூட, அதனைத் துளியும் மதியாது அலட்சியப்போக்குடன் காலம் தாழ்த்துவது எட்டு கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தையே அவமதிக்கின்ற படுபாதகச்செயலாகும். இது மாநிலத்தன்னாட்சி மீதும், தமிழகத்தின் இறையாண்மையின் மீதும் மத்திய அரசு தொடுக்கும் மறைமுகப்போராகும்.
நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து மற்ற மாநிலங்களில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் மருத்துவக் கலந்தாய்வே நடைபெறாதது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் மனஉளைச்சலையும், பெருங்குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் ” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைகிறேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: இயக்குநர் எஸ்ஏ.சந்திரசேகரின் பிரத்யேக நேர்க்காணல்