சென்னை: கடந்த சில தினங்களாக சங்கர் நகர் பகுதிகளில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பதிக்கப்பட்டுள்ள இரும்பு குழாய்கள், மின் மோட்டார்கள் அடிக்கடி திருடு போவதாக, அப்பகுதி பொதுமக்கள் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனகாபுத்தூர் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் அருண் (எ) கருவண்டு (20), பரமசிவம் (18), சிலம்பரசன் (18), வினோத் (எ) அந்தோணி (36) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களது வீட்டில் பதுங்கியிருந்த நான்கு பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்த காவல்துறையினர், காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து காமராஜபுரம் பகுதியில் உள்ள இரும்புக் கடைக்கு சென்று மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளனர். அதற்கு கடைக்காரர் சும்மா பணம் தரமுடியாது ஏதாவது பொருள்களை எடுத்து வாங்க பணம் தருகிறேன் எனக் கூறியுள்ளார்.
இதனால் 4 பேரும் சேர்ந்து பம்மல் பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்ட மின் மோட்டார்கள் மற்றும் இரும்புக் குழாய்களை திருடி விற்பனை செய்து பணம் வாங்கி மது குடிப்பதும் கஞ்சா புகைத்துவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:யாரலும் தேமுதிகவை அழிக்க முடியாது - விஜயகாந்த்