சென்னை கிண்டியை அடுத்த மடுவின்கரை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் ரூ.200 கள்ளநோட்டைக் கொடுத்து மதுபானம் வாங்க முற்பட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அஜாஸ் என்பவனை கடந்த 17 ஆம் தேதி கிண்டி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவன் அளித்த தகவலின் அடிப்படையில் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அஜாஸின் கூட்டாளியான அம்ருதின் என்பவனையும் கைது செய்த போலீசார் அவர்கள் இடத்திலிருந்து ரூ.19 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவ்விருவரிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூரைச் சேர்ந்த ராஜி என்பவனிடம் இருந்து கள்ள நோட்டுக்களை வாங்கி அதை மாற்றிக் கொடுத்து கமிஷன் பெற்று வந்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று மாமண்டூர் சென்ற தனிப்படை போலீசார் அங்கிருந்த ராஜி மற்றும் அவனது கூட்டாளிகளான பிரபு, சயின்ஷா மற்றும் ஹியதுல்லா ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.40 லட்சம் மதிப்பிலான ரூ.200 மற்றும் ரூ.500 அடங்கிய கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர், சென்னை அழைத்து வரப்பட்ட அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாண்டிச்சேரியைச் சேர்ந்த ரகு என்பவன் தான் இவர்களுக்கு கள்ள நோட்டுகளை சப்ளை செய்யும் முக்கிய நபர் என்பதும், ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கான உண்மையான நோட்டுகளை கொடுத்தால் அதற்கு ஈடாக ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை ரகு இவர்களுக்கு கொடுப்பான் என்பதும் அந்த பணத்தை டாஸ்மாக், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் மாற்றி இவர்கள் லாபம் பெற்று வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே கடந்த 4 தினங்களுக்கு முன் புதுச்சேரி போலீசாரால் ரகு கள்ள நோட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளான்.
இந்நிலையில் அவனை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே கள்ள நோட்டு கும்பல் குறித்த முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாண்டிச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ரகுவை இந்த வழக்கிலும் கைது காட்டி பாண்டிச்சேரி சென்று அவனை அழைத்து வந்து காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கிண்டி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் ஆஜாரான நீலகண்டன் - சத்தீஸ்கரில் விநோத சம்பவம்