எழும்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், தேசிய பாம்புகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஷியாமளா மற்றும் ராபின்சன் ஆகியோர் குடியிருப்புப் பகுதிகளில் புகும் பாம்புகளை, பொதுமக்களுக்கும் பாம்புகளுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பிடித்து அப்புறப்படுத்துவது குறித்து பயிற்சியை வழங்கினர். மேலும், பாம்புகளை எவ்வாறு பிடிப்பது, எந்த இடத்தில் பிடித்தால் பாம்புகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் பிடிக்க முடியும் என்பன குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சியின்போது செய்தியாளர்களைச் சந்தித்த தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இணை இயக்குநர் ஷாகுல் ஹமீது, “சென்னையைப் பொருத்தவரை 2019ஆம் ஆண்டில் 104 பாம்பு பிடி புகார்கள் வந்துள்ளன. தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் புகார்கள் வரை வருகின்றன. அண்மைக் காலங்களில் நகர்ப்புற வளர்ச்சி காரணமாக பாம்புகளின் இருப்பிடங்கள் பாதிக்கப்பட்டு, அவை நமது வீடுகளுக்குள் வருகின்றன. பாம்புகள் அனைத்தும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்டவை ஆகும். பாம்புகள் உழவனின் நண்பன். இயற்கைச் சூழலில் பாம்புகளுக்கும் முக்கிய இடம் உள்ளது. பொதுமக்கள் அவர்களின் இல்லங்களில் பாம்புகளைக் கண்டால் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். எங்களின் வீரர்கள் உடனடியாக அங்கு வந்து பாம்புகளை லாவகமாகக் கையாண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள் ” என்றார்.
தொடர்ந்து பேசிய பாம்பு பிடி பயிற்சியாளர் ராபின்சன், “வீரர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் இதுபோன்ற பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் எங்களின் முக்கிய நோக்கம் “ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 16 நாட்டு தூதர்கள் காஷ்மீர் பயணம்!