மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாட்டில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 18 ஆயிரத்து 711 பேருக்குப் புதிதாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.71 விழுக்காடு பேர், ஆறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இச்சூழலில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைவருக்கும் இபாஸ் கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், "கரோனா பரிசோதனை செய்து கொள்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாட்டிற்கு வணிகத்திற்காக வந்து 72 மணி நேரம் இருப்பவர்களுக்கு, வீட்டில் தனிமைப்படுத்தப்படும் விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் (கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி தவிர), அனைத்து சர்வதேச, உள்நாட்டு பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாகும். அமெரிக்க உள்பட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கரோனா பரிசோதனைக்கு மாதிரி கொடுத்து விமான நிலையத்தை விட்டு வெளியேற வேண்டும். அதனடிப்படையில் பொதுச் சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும்.
பயணத்திற்கு முன் ஆன்லைன் ஏர் சுவிதா இணையதளத்தில் (www.newdelhiairport.in) சுய அறிவிப்புப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களின் கடந்த 14 நாள்களின் பயண விபரங்களையும் அளிக்க வேண்டும். மேலும் 72 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை அறிக்கையைக் சமர்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.