கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமலிருந்த உள்ளாட்சித் தேர்தல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நெல்லை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் இவற்றிலிருந்து புதிதாக பிரிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 16ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் ஏலம் விடப்படலாம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக, மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியை தொடர்புகொண்டு கேட்டபோது, தேர்தல் முற்றிலும் ஜனநாயக முறையில் மட்டுமே நடைபெற வேண்டும். தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஏலம் விடுதல் போன்ற நிகழ்வுகள் எங்காவது நடக்குமானால், சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்கும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஏலம் சொல்றவங்க...சொல்லுங்கப்பா' - ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சம்!