சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, ”நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் 9,10 ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் 2017-18 ஆம் ஆண்டில் 3.61 விழுக்காடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு 16 விழுக்காடு என்று தெரிவித்துள்ளது. இந்த இரண்டு புள்ளி விவரத்திலும் மாற்றம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு குறித்து மத்திய அரசு அளிக்கும் மற்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும்போது, இது மட்டும் எப்படி மாறுபடுகிறது. இதற்கு என்ன காரணம்” என்று கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “புள்ளி விவரத்தில் எந்த மாறுபாடும் இல்லை. முன்பு ஆசிரியர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணக்குகள், இப்போது ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாடு இடைநிற்றலில் 3.61 விழுக்காடு என்ற நிலையில் நான்காம் இடத்தில் இருக்கிறது. பிகார் மாநிலம் 39.6 விழுக்காடு என்ற நிலையில் முதல் இடத்தில் இருக்கிறது. மடிக்கணினி, சைக்கிள் ஆகியவை வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றால் இங்கு இடைநிற்றல் குறைந்துள்ளது. எங்கள் புள்ளி விவரத்தில் எப்போதும் தவறு கிடையாது “ என்றார்.
இதையும் படிங்க: ’அமைச்சர் வேலுமணி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை’ - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு