திருவள்ளூர்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.13) பூந்தமல்லி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதி மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “மாநகர், புறநகர் பகுதிகளில் மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. திமுக அரசு சரியாக திட்டமிடாததால் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்படுகின்றனர். இது போன்ற நேரங்களில் அதிமுக அரசு அலுவலர்களை அழைத்து மழை தேங்கும் பகுதிகளை முன் கூட்டியே கண்டறிந்து தூர் வாரினோம்.
விஷக் காய்ச்சல் ஏற்படும் அபாயம்
ஆட்சியர் அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுத்தார்கள். மழை பெய்த சிறிது நேரத்தில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆய்வு மையம் அறிவித்தவுடன் அலுவலர்கள் மின் மோட்டார் வைத்து அகற்றினார்கள். திமுக அதனை செய்யவில்லை மழை பெய்து இத்தனை நாள்கள் ஆகியும் மழை நீர் அகற்றாததால் மழை நீரோடு கழிவு நீர் கலந்து விஷக் காய்ச்சல் வருகிறது.
பூந்தமல்லி பகுதியில் நான் ஆய்வுக்கு வருவது தெரிந்து தண்ணீர் அகற்றியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டும் திமுக அரசு அதனை செய்யவில்லை. இங்கு மருத்துவ முகாம் ஏற்படுத்தவில்லை, மக்களுக்கு முகாம் ஏற்படுத்தவில்லை. அரசு விழிப்போடு இருந்து செயல்பட்டு மருத்துவ முகாம் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
தடுப்பு பணிகள்
தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். “காஞ்சிபுரம் மாவட்டத்தில் 586 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால்வாய் பனி 90 விழுக்காடு முடிந்துள்ளது. அடையாறு ஆற்றில் வெல்லம் வரும்போது தடுப்புகள் அமைக்கப்பட்டது.
மேலும் திருவொற்றியூர் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அம்பத்தூர், கொரட்டூர் ஏரி புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதிமுக கொண்டு வந்த பனிகளைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.
வேளாண் மக்களுக்கு நிதி பெற்று தரக் கோரிக்கை
பூந்தமல்லியில் 56 ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. திருநின்றவூரில் ஏரியில் வீடு கட்ட அனுமதி அளித்தது திமுக அரசு. போரூர், அயனம்பாக்கம் ஏரிகள் தூர் வாரி ஆழப்படுத்தும் பணி நடந்துவருகிறது. திருமுல்லைவாயில் காவலர் குடியிருப்பு இன்னும் திறக்கவில்லை.
அன்னனூர் மேம்பாலம், பட்டாபிராம் டைடில் பார்க் பேஸ் 1 திறக்கவில்லை. அதிமுக கொண்டு வந்ததால் பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளன.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறு, குறு நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து திமுக நிதி பெற்றுத் தரவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண் மக்களுக்கு நிதி பெற்று தர வேண்டும், ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
காப்பீடு இழப்பீடு தொகை பெற்றுத் தர வேண்டும். நான் வருவதை அறிந்து தண்ணீர் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு