தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகு கரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அனைத்தும் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. இதனால் கரோனா அல்லாத மற்ற நோயாளிகளுக்கு ஊரடங்கிற்கு முன்னர் தேதி முடிவாகியிருந்த அறுவை சிகிச்சைகள் தவிர மற்ற அவசரத் தேவையல்லாத சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அம்மா முழு உடல் பரிசோதனை மையமும் மூடப்பட்டுள்ளது. சிறுநீரகக் கோளாறுக்கான டயாலிசிஸ், புற்றுநோய்க்கான கீமோ தெரபி மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகள் மட்டும், ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொடர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து தொடர்பு கொண்டு சிகிச்சைக்கு வர அழைத்தாலும், கரோனா அச்சத்தால் அவர்கள் வர மறுப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மருத்துவமனையில் ஆய்வக உதவியாளர், டயாலிசிஸ் உதவியாளர், மருத்துவப் பணியாளர் போன்ற ஒப்பந்த பணியாளர்கள் சிலரும், கரோனா வந்து விடும் என்ற அச்சத்தில் பணிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மருத்துவப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான அறுவை சிகிச்சைகளே நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஊரடங்கு தற்போது சற்று தளர்த்தப்பட்டுள்ளதால் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நோயாளிகள் காத்திருப்பதால், அடுத்தடுத்த மாதங்களில் அறுவை சிகிச்சைகள் பெருமளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கல்வி டிவியில் நீட் தேர்வு பயிற்சி - யூடியூப் மூலம் மறுஒளிபரப்பு