சென்னை ஐஐடியில் பயின்றுவந்த ஃபாத்திமா என்ற மாணவி, சில நாள்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அது தொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் ஐஐடி, தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "சென்னை ஐஐடியில் படித்துவந்த மாணவியின் திடீர் மறைவினாலும் அதற்குப் பின் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு ஐஐடி மாணவர்கள், ஆசிரியர்கள் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நிகழ்வு குறித்து தகவல் ஐஐடி நிர்வாகத்துக்குக் கிடைத்தவுடன் காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கான முழு ஒத்துழைப்பும் ஐஐடி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுவருகிறது. இதில் சட்டப்படி அனைத்தையும் செய்ய ஐஐடி தயாராகவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல் துறையினரின் விசாரணை முடியும் முன்னரே நாட்டின் மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றான ஐஐடியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செய்திகள் ஊடகம் மூலமும் சமூக வலைதளத்திலும் பரவிவருகிறது எனவும் ஐஐடி கவலை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள், மேலும் நடைபெறாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் விசாரணை நிறைவடையும் முன் யாரும் வதந்திகளைப் பரப்பாமல் இருக்க வேண்டும் என்றும் ஐஐடி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.