திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிகாரிகளை அவ்வப்போது நிலைமைகளுக்கேற்பவும், தேவைகளுக்கேற்பவும் இடமாற்றம் செய்வது ஆட்சியாளர்களின் உரிமை என்றபோதும், இந்த நோய்த் தொற்று காலத்தில் அதிமுக அரசின் முன்னுக்குப்பின் முரணான நடவடிக்கைகளும், அதில் உள்ள அரசியல், சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்திவருகிறது.
பாதிப்புகளை குறைத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக, ‘கோவிட்-19 பாசிட்டிவ்’ நோயாளிகள் இறந்திட நேரும்போது, ‘நெகட்டிவ்’ எனக் குறிப்பிடப்படுவது குறித்து தொடர்ந்து ஆதாரப்பூர்வமான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன. சென்னையில் மட்டும் 400க்கும் அதிகமான கரோனா மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதால்தான், சுகாதாரத் துறை இணை இயக்குநர் வடிவேலன் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு, ஆய்வை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்துதான் சுகாதாரத்துறை செயலர் மாற்றத்திற்கான அறிவிப்பும் வெளியானது.
நிலைமை கைமீறி போய்க்கொண்டிருக்கிற பேரிடர் சூழலில் இனியேனும் முறையான, வெளிப்படையான தன்மையுடன் செயல்பட்டு, பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தி, இறப்பினைக் கட்டுப்படுத்துவதுடன், எத்தனை நோயாளிகள், எவ்வளவு பரிசோதனைகள், எத்தனை மரணங்கள் என்பதை மறைக்காமல் வெளியிட வேண்டும். துறைச் செயலரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் துறை அமைச்சரையும் மாற்றியிருக்க வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’கரோனா தடுப்பு பணிகளுக்கு மேலும் 81 மருத்துவ குழுக்கள்’