திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், ” கூட்டத்தில் தேர்தல் களப்பணிகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மற்றபடி கூட்டணி குறித்தோ, தொகுதிகள் பற்றியோ பேசப்படவில்லை. வாக்காளர் சரி பார்க்கும் பணிகள், தேர்தல் பரப்புரை, தேர்தல் அறிக்கை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
முதலமைச்சர் செல்லும் இடங்களிலெல்லாம் பின்பற்றப்படாத கரோனா தடுப்பு விதிமுறைகள், உதயநிதி ஸ்டாலின் செல்லும் இடங்களில் மீறப்படுவதாக அவர் கைது செய்யப்படுவது, ஆளுங்கட்சிக்கு பயந்து காவல்துறை கடமை தவறுவதை காட்டுகிறது.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ள பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி குறித்து திமுகவிற்கு எந்த அழைப்பும் வரவில்லை. அரசு நிறுவனங்களில் வட நாட்டை சேர்ந்தவர்களை நியமிப்பது, கல்வி முறை மாற்றம், விவசாய அழிப்பு என செயல்பட்டு வரும் பாஜகவுடன், அதிமுக கைக்கோர்ப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம். ஈழப்படுகொலை குறித்து பொய்களை கூறுவதில் பாஜக மிகப்பெரிய பொய்யர்கள் என்றால், அவர்களின் சகோதர பொய்யர்கள் அதிமுகவினர். இந்த தமிழர் விரோத கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள் “ என்றார்.
இதையும் படிங்க: விளைவுகள் கடுமையாக இருக்கும் - காவல்துறையை எச்சரிக்கும் திமுக!