சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் அண்ணா நகர் முதல் தெருவில் ஷபானா என்பவர் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர்கள் வீட்டின் அருகே பத்து ஆண்டுகளாகத் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் கடை வைத்திருந்த இடத்தில் மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் ஆட்டோ ஸ்டாண்ட் போர்டு வைத்துள்ளார்கள். இதனை ஷபானா குடும்பத்தினர், கடை வைத்துள்ள இடத்தில் ஏன் போர்டு வைத்துள்ளீர்கள் எனக் கேட்டுள்ளனர்.
அதற்கு திமுக நிர்வாகிகள், உங்களைக் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்து தகாத சொற்களால் திட்டி உள்ளனர்.
மேலும் நேற்றிரவு (ஜனவரி 2) ஷபானா குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சிலர் தள்ளுவண்டிக் கடையை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த ஷபானா சகோதரி ராஹிமுன்னிசா அதிகப்படியான மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் தள்ளுவண்டிக் கடையை அடித்து நொறுக்கிய அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன், செல்வம், ராஜா, அன்பு ஆகியோரைக் கைதுசெய்து, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஃபிளக்சிபில் அண்ட் டைனமிக் முதலமைச்சர்... ஸ்டாலினைப் பாராட்டிய ஆளுநர்!'