இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன், ”தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழர்களும் கோரிவரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு செய்யலாம் என்று அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது.
இந்து அறநிலையத் துறை சார்பில் கொடுக்கப்பட்ட பதிலில், தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு செய்யப்படும் என அறிவித்திருக்கிறது. சம்பந்தமே இல்லாத சமஸ்கிருதம் எங்களுக்குத் தேவையில்லை என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கோரிக்கைவைத்துள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்காக ஒட்டுமொத்த தமிழர்கள் அணிதிரண்டதுபோல், வருகிற 5ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு நிகழ்வில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும்போது, தமிழர்கள் அனைவரும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் அணிதிரண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ், சமஸ்கிருதம் இரு மொழிகளிலும் குடமுழுக்கு: தஞ்சை பெரிய கோயில் வழக்கில் தீர்ப்பு