தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்தவும், மாநிலத்தைத் தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெறும், ’ஒளிரும் தமிழ்நாடு’ என்ற காணொலி மாநாட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தொடங்கிவைத்து, தலைமையுரையாற்றினார்.
இந்த மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
அப்போது முதலமைச்சர் பேசியவை பின்வருமாறு:
கரோனாவால் ஏற்பட்ட மாற்றங்கள் இயல்பாகி வரும் சூழல் உருவாகியுள்ளது. உலகப் பொருளாதாரம் படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
கரோனா தடுப்புக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, தமிழ்நாட்டிலேயே தயாரிக்க ஊக்கமளிக்கும் வகையில், சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாகவும், தொழில் துறையினரின் சிறப்பான முயற்சிகளின் விளைவாகவும், இன்றைக்கு பல்வேறு நிறுவனங்கள், இப்பொருள்களின் உற்பத்தியைத் தொடங்கி இந்தியா முழுவதும் வழங்கி வருகின்றன. எந்த ஒரு அவசரச் சூழ்நிலையிலும், பேரிடரிலும், நாட்டிற்கே துணையாக நிற்கும் தமிழ்நாட்டு மக்களின் திறன், இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
கரோனா தொற்றின் பரவலிலிருந்து தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க, ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலத்திலும் மக்களின் வாழ்வாதாரம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, படிப்படியாக ஊரடங்குக்குத் தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது. மாறிவரும் சூழ்நிலையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. சூழ்நிலையைப் பொறுத்து, மேலும் தளர்வுகளை அரசு அறிவிக்கும்.
சமீபத்தில் வெளியான ’ELARA SECURITIES’ நிறுவனத்தின் ஆய்வில், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மிகவும் தொழில் மயமான மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்கள் பின்தங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு இயல்புநிலையை நோக்கி படிப்படியாக முன்னேறி வருவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, பிணை சொத்தின்றி உடனடி கடன் வழங்கும் திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம், கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (CORUS) என்ற திட்டத்தை மார்ச் 31ஆம் தேதி மாநில அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 955 நிறுவனங்களுக்கு 120 கோடி ரூபாய் செயல்பாட்டு மூலதனக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல், உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளன. இந்நிறுவனங்களைத் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமைச் செயலர் தலைமையிலான உயர்நிலைக் குழுவினை மாநில அரசு அமைத்துள்ளது. அதுமட்டுமின்றி, பொருளாதார மீட்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க டாக்டர் சி. ரங்கராஜன் தலைமையில் பொருளாதார நிபுணர்கள், தொழில் முனைவோர், அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
இத்தகைய சீரிய முயற்சிகளின் விளைவாக, சமீபத்தில் தொழில் துறை சார்பில், ஜெர்மனி, ஃபின்லாந்து, தைவான், ஃப்ரான்சு, கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன், அவர்களது புதிய மற்றும் விரிவாக்க தொழில் திட்டங்களை தொடங்கிட, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இத்திட்டங்கள் மூலம், 15,128 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 47,150 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்நிகழ்ச்சி, உலகத்தின் பார்வையை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பியுள்ளது. இதுமட்டுமின்றி, பல்வேறு தொழில் துறைகளில், உலகளவில் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் தலைமை அலுவலர்களுக்கு, தமிழ்நாட்டில் முதலீடு செய்திடுமாறு, நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். இவற்றில், ஆப்பிள், சாம்சங், அமேசான், ஏர்பஸ், ரோல்ஸ் ராய்ஸ், BOIENG GENERAL ELECTRIC போன்ற நிறுவனங்களும் அடங்கும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தொழில் துறையைப் பொருத்தவரையில், தமிழ்நாடு அரசின் செயல் திட்டமாக, நான்கு முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலையினை விரைவாக அடைந்திட உதவி புரிதல்
- புதிய முதலீடுகளை ஈர்த்தல்
- அரசு அனுமதிகள் மற்றும் நடைமுறைகளை மேலும் எளிதாக்குதல்
- கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, தொழில்களுக்குத் தேவையான பணப்புழக்கத்தினை அதிகரித்தல்