சென்னை: திருநெல்வேலி மாநகரில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் எதிரொலியாக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கட்டடங்களை ஆய்வுசெய்து, இம்மாத இறுதியில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 281 பள்ளிகளின் தரத்தை (சுற்றுச்சுவர், கழிப்பறை, வகுப்பறை) 10 குழுவைக் கொண்டு ஆய்வுசெய்ய மாநகராட்சித் திட்டமிட்டு, இன்றுமுதல் (டிசம்பர் 20) ஆய்வை தொடங்கியுள்ளனர்.
3 நாள்களுக்கு ஆய்வு
ஒரு குழுவில் ஒரு உதவி கல்வி அலுவலர், ஒரு செயற்பொறியாளர், ஒரு தலைமையாசிரியர், மூத்த ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் என ஐந்து நபர்கள் இருப்பார்கள்.
இதையடுத்து உதவி கல்வி அலுவலர் முனியன் தலைமையில் கிண்டியில் உள்ள படுவான்கரை மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த அவர்," இன்றுமுதல் ஆய்வு தொடங்கியுள்ளது. ஒரு குழுவில் ஐந்து நபர்கள் தொடர்ந்து, பள்ளிகளை வகுப்பறை வகுப்பறையாகச் சென்று ஆய்வுமேற்கொள்ளப்படும்.
வகுப்பறைச் சுவர் விரிசல், நீர்க்கசிவு வகுப்பறை மேற்கூரை விரிசல் இதைத் தவிர்த்து மின்கசிவு, மாணவர்கள் அமரும் மேசைகள் வகுப்பறையில், மின்விசிறிகள், மின் விளக்குகள் உள்ளிட்டவையும் ஆய்வுசெய்யப்படும்.
அதுமட்டுமில்லாமல் வகுப்பறையில் கூர்மையான பொருள்கள், பள்ளிக்கூட சுற்றுச்சுவர் அருகில் இருக்கும் குப்பைகள் முதலியவற்றையும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். ஆய்வு மூன்று நாள்களுக்கு மேல் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீனவர்களுக்கு எச்சரிக்கை