வாழ்வும் - வாழ்வாதாரமும்
கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழ்நாடு கண்டிராத மிகப் பெரிய சவாலாக கரோனா பாதிப்பு அமைந்துள்ளது. நாட்டிலேயே கரோனா பாதிப்பில் முன்னணியில் தமிழ்நாடு இருக்கிறது. நோய் பாதிப்பை தடுக்க மருத்துவ உபகரணங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்குவது உள்ளிட்ட பணியை மேற்கொள்ள வேண்டிய அதே நேரத்தில் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி, அவர்களின் வாழ்வாராதத்தை பாதுகாப்பதும் அரசின் கடமை. இந்த நேரத்தில் நிதி ஆதாரம் என்பது மிகவும் முக்கியமாகிறது.
நிதி கோரும் முதலமைச்சர்
தமிழ்நாட்டுக்கு நிதி கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில், கரோனா தொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்ளவும், நோய்க் கிருமியின் தாக்கம் குறைந்த பின் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்காகவும் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டும், முகக் கவசம், பாதுகாப்பு உபகரணங்கள், செயற்கை சுவாசக் கருவி ஆகியவை வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வேண்டும் எனக் கோரியுள்ளார்.
எம்.பி. நிதி கட்
கரோனா பாதிப்புக்கு போதிய நிதி திரட்டும் வகையில் எம்.பி.களின் சம்பளம் 30 சதவிகிதம் வரை குறைக்கப்படும் என்றும் எம்.பி.களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் அந்தந்த தொகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கி வந்த நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது.
இது மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. "ஒவ்வொரு பகுதியிலும் நோய் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது, மக்களின் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிந்து அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தாலுக்கா வாரியாக, மண்டல வாரியாக பிரித்து செய்ய வேண்டிய வேலை. டெல்லியில் அமர்ந்துகொண்டு அனைத்தையும் மத்திய அரசால் செய்துவிட முடியாது" என அரசியல் விமசகர்கள் கூறுகின்றனர்.
பாதிப்பை எதிர்கொள்ள அதிகாரப் பரவல், நிதி ஆதார பரவல் மிகவும் முக்கியமானது என பொது சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு
கரோனா பாதிப்புக்கு மாநில பேரிடர் நிரவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு இதுவரை 510 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திலும் இது எதிரொலித்தது. கரோனா தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஹேமலதா அமர்வு, கரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிகமான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.
பேரிடர் நிரவாரண நிதியில், மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு ஆயிரத்து 611 கோடி, உத்தரப்பிரதேசத்துக்கு 966 கோடி, மத்தியப்பிரதேசத்துக்கு 910 கோடி, ஒடிசாவுக்கு 802 கோடி, ராஜஸ்தானுக்கு 740 கோடி, பீகாருக்கு 708 கோடி, குஜராத்துக்கு 662 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கு 510 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசை சாந்திருக்கும் மாநிலங்கள்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தியாவசிய ப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தவிர்த்து அனைத்து நிறுவனங்களையும் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு அரசு பட்ஜெட்டின் வரி வருவாய் கணக்குகள் வீணாகியுள்ளன.
அரசின் வரி வசூல் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி அமலாகத்துக்குப் பிறகு மாநில அரசு முற்றிலுமாக மத்திய அரசையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு 12 ஆயரித்து 263 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தர வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு குறைவான நிதி
நிதிக்குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாட்டுக்கு பாதமாகவே அமைந்து வருகின்றன. 15 வது நிதிக்குழுவின் கணக்கீட்டு முறையால் தமிழகத்துக்கு ஆராயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் அதிகளவு பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு எப்போதும் குறைவான நிதியே ஒதுக்கப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
தற்போதும் நிதிக்குழு கணக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டுக்கு குறைவான நிதி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 510 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிதிக்குழுவின் கணக்கீட்டு முறையால் மாநில பேரிடர் நிவராண நிதியில் தமிழகத்துக்கு வழங்கப்படும் நிதி 64.65 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி 120.33 சதவிகிதம் அதிகரித்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
உடனடி தேவை
மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், தற்காப்பு உடைகள் வாங்குவதற்கும் தமிழ்நாடு அரசுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தவறான கணக்கு
2015இல் சென்னை பெருவெள்ளம், 2016 வர்தா புயல், 2017 ஒக்கி புயல், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வறட்சி, 2018 கஜா புயல் என தமிழ்நாடு பல்வேறு இயற்கை பேரிடர்களை தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில் பேரிடர் நிவாரண நிதியில் தமிழகத்துக்கு குறைவான நிதி வழங்கப்படுகிறது. கரோனா எதிர்ப்பில் போராடும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு நிதியை பகிர்ந்தளிக்கும் முறை முற்றிலும் தவறானது என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "தற்போது ஊரடங்கு உத்தரவால் மாநிலங்களின் வரி வருவாய் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது. இதில் பிரதான வருவாய் ஆதாரங்களான மதுபான விற்பனை, முத்திரை தாள் வரி ஆகியவை முற்றிலுமாக நின்றுள்ளது. ஆனால் மாநிலத்தின் செலவுகள் அப்படியே உள்ளன.
ஒடிசா, மஹராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அதிகபட்சமாக நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏற்ற இறங்கங்கள் இருப்பதற்கு காரணம், நிதிக்குழு தீர்மானிக்கும் விதம். 30 சதவிகிதம் மதிப்பீடு ஏற்கெனவே ஒரு மாநிலம் இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இது தவிர, மக்கள் தொகை, பரப்பளவு, குறிப்பிட்ட மாநிலத்தில் பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்பின் அடிப்படையில் நிதி பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இது புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களை மனதில் வைத்து, அதனடிப்படையில் வகுக்கப்படுகிறது. ஆனால் கரோனா வைரஸுக்கு இது பொருந்தாது. இந்த நிதியை சமமாக பகிர்ந்து கொடுத்திருக்க வேண்டும் . மத்திய அரசின் இந்த நடைமுறை தவறாக உள்ளது" என்றார்.
மத்திய அரசு நிதி
மாநில அரசின் கடன் வரையறையை மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 3 சதவிகிதத்தில் இருந்து 4.5 சதவிகிதமாக உயர்த்தவும், 2020- 21 நிதியாண்டில் 33 சதவிகிதம் கூடுதலாக கடன் பெறவும் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
2020-21 நிதியாண்டுக்கு நிதிக்குழுவின் பரிந்துரையின்படி ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதியில் 50 சதவிகிதத்தை உடனடியாக வழங்க வேண்டும், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 50 சதவிகித வருவாய் பற்றாக்குறை இழப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பிற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. அதன்படி, 2019-2020 டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பேரிடர் நிதி ஒருபுறமிருந்தாலும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதி கொடுத்தாலே போதுமானது என்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம். தொடர்ந்து பேசிய அவர், "வரி பங்கு, வருவாய் பற்றாக்குறை இழப்பீடு உள்ளிட்டவற்றுக்காக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும். இதில் பாதியை கொடுத்தாலே கரோனாவிலிருந்து தமிழ்நாடு கரையேறிவிடும்" என்றார்.