உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், முகக்கவசங்கள், கிருமி நாசினி திரவங்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், அவை பதுக்கி வைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளது.
இவ்விவகாரத்தில் பிற மாநில அரசுகள் உத்தரவுகளை பிறப்பித்த போதும், தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள முகக் கவசம், கிருமி நாசினிகளை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வது 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும். சென்னையில் முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் கிடைக்காத நிலை உள்ளதால், மாநில அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலனளிக்காது. எனவே மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, இதுதொடர்பாக மார்ச் 20ஆம் தேதிக்குள் அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: அத்தியாவசிய பொருள்களை வாங்கிக் குவிக்கும் மக்கள்