சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தொலைத்தொடர்பு மையம், கட்டுப்பாட்டு அறை பயன்பாட்டை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர்,
"கரோனாவின் இரண்டாவது அலை தற்போது தீவிரமாகப் பரவிவருகிறது. சென்னையில் கிட்டதட்ட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கட்டுப்பாட்டு அறை
தற்போது, மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது. கடந்த வருடத்தில் நான்கு லட்சம் அழைப்புகள் மனநல ஆலோசனைக்காக கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. டிசம்பர் மாதம் நோய் தொற்று குறைந்ததால், அந்தக் கட்டுப்பாடு அறை மூடப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு 100 இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது.
கட்டுப்பாட்டு அறை எண் இரண்டு உள்ளது. அவை 044- 46122300 மற்றும் 044- 25384520. கரோனா மற்றும் தடுப்பூசி சம்மந்தமாக கேள்விகள், சந்தேகங்கள் கேக்கலாம். பதிலளிப்பதற்கு மருத்துவர்கள் தயாராக உள்ளனர். விட்மெட் செயலி (Vidmed app) மூலம் வீடியோ காலில் சந்தேகளை மருத்துவர்களிடம் கேட்டுக்கொள்ளலாம். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தினமும் தொலைபேசி கொண்டு ஆலோசனை வழங்கப்படும். கட்டுப்பாட்டு அறையில் மூன்று குழு சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.
விவேக் மரணதிற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை
நடிகர் விவேக் மரணதிற்கும் தடுப்பூசிக்கும்,எந்த தொடர்பும் இல்லை. கரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் விதிமுறையை கடைபிடிக்காவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும்.
ஒரு நாளுக்கு 25,000 கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 11,500 நபர்கள், தற்கால பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தினமும் பரிசோதனை செய்து வருகின்றனர். சென்னையில் 12,600 படுக்கைகள் தயாராக உள்ளது. 80% நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பில் 3 லட்சம் தடுப்பூசிகள்
சுமார் 13.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்று லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது. 45 வயதுக்குமேல் உள்ள 21 லட்சம் நபர்களுக்கு மட்டுமே விரைவில் தடுப்பூசி போடப்படும்.