தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பண்டிகை காலம், குளிர் காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனிடையே, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பண்டிகை கூட்டம், புயல், மழை, பணி போன்றவை காரணமாக கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சவாலாக உள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் கரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று இரண்டாம் அலை வீசி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தியுள்ளோம்" என்றார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,430 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 46ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 393 பேருக்கு தொற்று உறுதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், இன்று ஒரே நாளில் 1,450 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் இன்று உயிரிழந்தனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 65,579 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.