2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் வியூகங்கள் அமைத்து தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன.
'அதிமுகவை நிராகரிக்கிறோம்' vs 'வெற்றிநடை போடும் தமிழகம்'
அந்தவகையில், 'வெற்றிநடை போடும் தமிழகம்' என்னும் பெயரில் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பரப்புரையையும், 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தையும் நடத்திவருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் சட்டப்பேரவைத் தேர்தலின் பரப்புரையைத் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக மேற்கொண்டுவருகிறார். அந்த வகையில், இன்று கமல்ஹாசன் சொந்த ஊரான பரமக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.
கமல்ஹாசனின் 65ஆவது பிறந்தநாள் (நவ. 07) அன்று, அவர் தனது தந்தை சீனிவாசனுக்குச் சொந்த ஊர் தெளிச்சாத்தநல்லூரில் சிலையைத் திறந்துவைத்தார். இந்தச் சிலையை திறந்துவைத்து பேசிய கமல், "எனது தந்தை 'நீ அரசியலுக்குப்போக வேண்டும்' என்று கூறுவார். 'நீங்கள் சுதந்திரம் பெறுவதற்காகப் போராடினீர்கள் நான் அரசியலுக்குச் சென்று என்ன செய்வது' என்று கேட்டதற்கு மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டியது இருந்தால்? என்று பதில் கூறினார்.
தற்போது, மீண்டும் ஒரு சுதந்திரப் போரட்டம் செய்ய வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இலவசங்களைக் கொடுத்து மக்களையும் நாட்டையும் கெடுத்துவைத்திருக்கிறார்கள். ராமநாதபுரத்திலிருந்து இளைஞர்கள் வேலைக்காக வெளியூருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதனாலேயே மக்கள் நீதி மய்யம் இங்கு திறன் மேம்பாட்டுக்கழகம் அமைக்கப்பட இருக்கிறது" என்றார்.
எம்ஜிஆரின் வாரிசு
தொடர்ந்து திமுக, அதிமுக அரசை கடுமையாகச் சாடிவரும் கமல்ஹாசன், எம்ஜிஆர் ஆட்சியைத் தன்னால் மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துவருகிறார். நான் எம்ஜிஆரின் நீட்சி என எங்கும் பேசுவேன், எப்போதும் தைரியமாகப் பேசுவேன் என்றும் எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான் என்றும் கமல்ஹாசன் தொடர்ந்து கூறிவருகிறார்.
பரமக்குடியில் களம்
2019 மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கியுள்ள கமல் தனது சொந்த ஊரான பரமக்குடியில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துவருகின்றனர்.
முன்னதாக, கமல்ஹாசன் தான் சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். அவரை மக்கள் நீதி மய்யமும் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் உள்ளது- கமல்ஹாசன்