சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், செயற்கை இழை ஓடுதளப்பாதை, உள்ளிட்ட விளையாட்டு கட்டமைப்புகளை திறந்து வைத்தார். இதன் மதிப்பு 27 கோடியே 44 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயாகும்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டத்தை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்த முதலமைச்சர், சென்னை, அரியலூர், தஞ்சாவூர், ஈரோடு, தேனி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 296 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்தார்.
இதனையடுத்து, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி அபிநயா, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க ஏதுவாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார்.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காக, புதிதாகத் தொழில்களைத் தொடங்கவும், 300 கோடி ரூபாய் கரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, 5 பயனாளிகளுக்கு சிறப்பு நிதியுதவிக்கான காசோலைகளையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: வாழ்வுச் சான்றிதழை மின்னஞ்சல் வழியாக அனுப்ப தமிழ்நாடு அரசு அனுமதி