முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, வெட்டுக்கிளிகள் தாக்குதல் தொடர்பான அறிவுறுத்தல்களை துறை அலுவலர்களுக்கு அவர் வழங்கினார். பாலைவன வெட்டுக்கிளிகள் நகர்வு குறித்து மத்திய அரசு மூலமும், அண்டை மாநிலங்களில் உள்ள வேளாண்துறை வாயிலாகவும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி போன்ற அண்டை மாநில எல்லைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில், வெட்டுக்கிளி தாக்குதல் குறித்து தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்துறை இணை இயக்குநர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அறிவியலாளர்கள், வேளாண் அறிவியல் மைய அறிவியலாளர்கள் கொண்ட சிறப்புக்குழுவை அமைக்க உத்தரவிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட அலுவலர், மாவட்ட தீயணைப்பு அலுவலர், தோட்டக்கலை துணை இயக்குநர், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) மற்றும் வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோரையும் இச்சிறப்புக்குழுவில் உள்ளடக்கி, உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள், அறிவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உழவர் கடன் அட்டைகள் - வங்கிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!