இந்தியாவில் கரோனா பரவலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 373 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகப்பட்சமாக ராயபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர், இந்தக் கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் தண்டையார்பேட்டை, அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் என மாநகரின் பெரும்பாலான இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும், வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதுடன், சிலப் பகுதிகளில் மக்கள் தனி மனித இடைவெளியைப் பின்பற்றாமல், இயல்பாக தெருக்களில் நடமாடி வருகின்றனர்.
எனவே, சென்னை மாநகருக்கென கரோனா வைரஸ் தடுப்பு கண்காணிப்புக் குழு அலுவலர்களாக இராஜேந்திர குமார், கார்த்திகேயன், அபாஷ் குமார் ஆகியோர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களை உடனுக்குடன் கண்டறிந்து தனிமைப்படுத்தவும், கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரிசோதனைகளை அதிகரிக்கவும் மற்றும் தடுப்புப் பணிகளை கண்காணிக்கவும், குடிமைப் பணி அதிகாரிகளான கார்த்திகேயன், பாஸ்கரன் ஆகியோரை கூடுதல் சிறப்புக் குழு உறுப்பினர்களாக நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பணி மருத்துவர்களைத் தங்க வைக்க தனியார் ஹோட்டல்கள் - அரசு ஏற்பாடு