சென்னை: தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 தொடர் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா உள்பட 188 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதைத் தொடர்ந்து, செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், செஸ் ஒலிம்பியாட் தொடரை பிரபலப்படுத்தும் நோக்கிலும் தமிழ்நாடு அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக சதுரங்கத்தின் குதிரை வெட்டி சட்டையில் இருப்பது போன்ற உருவத்தை வடிவமைத்து 'தம்பி' என பெயர் சூட்டப்பட்டது. இந்த 'தம்பி' சின்னத்தின் சிலையை சென்னை மாநகரின் பல இடங்களில் அரசு காட்சிக்கு வைத்துள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் கட்டங்கள் போன்று கருப்பு, வெள்ளையில் வரையப்பட்டுள்ளது. தொடர்ந்து, நேப்பியர் பாலத்தில் தங்களை செல்ஃபி எடுத்துக்கொள்ள தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் அதிகாரப்பூர்வ பாடலின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட நிலையில், அதன் முழுப்பாடைலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பெற்றுள்ள அந்தக் காணொலியை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
தற்போது, செஸ் ஒலிம்பியாட் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், அதனை விளம்பரப்படுத்தும் ஒரு பகுதியாக 'நம்ம செஸ், நம்ம பெருமை' என்னும் வாசகத்தோடும், 44ஆவது செஸ் ஒலிம்பியாட்டின் இலச்சினையை ஆவின் சார்ந்த அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளிலும் அச்சிட்டு இன்று (ஜூலை 26) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் (ஜூலை 28) மாலை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வருகிறார். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரையிலிருந்து நெல்லை வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி