சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை நிர்வகித்து வந்த ஸ்ரீராம சமாஜம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியது.
முன்னதாக திங்கட்கிழமை அன்று, அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்த, அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றபோது, அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட, கவுன்சிலர் உமா ஆனந்தன், கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜகவினர் 75 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தப் பிரச்சனை இன்று(12-4-2022) சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது. பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "பாஜகவினர் மக்கள் பிரச்னையில் தேவையற்ற அரசியல் செய்து, தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்த நினைத்தால், அது கனவிலும் நடக்காது. பெட்ரோல்- டீசல் விலை உயர்வு போன்ற மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளை பாஜகவினர் பேச வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "முதலமைச்சர் பதிலளித்த விதம் சரியில்லை. முதலமைச்சராக இல்லாமல், திமுக தலைவராகவே பதிலளித்திருக்கிறார்" என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம், பாஜகவினர் அயோத்தியா மண்டப பிரச்னையை கைவிடப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: 'எவ்வகை கரோனா வந்தாலும் எதிர்கொள்வோம்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை