சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், 'தமிழ்நாடு, புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், திருவள்ளூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேக முட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் எட்டு செ.மீ மழையும், காஞ்சிபுரம் சோழிங்கநல்லூரில் ஏழு செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தற்போது வரை தமிழ்நாடு, புதுவையில் சராசரி மழையின் அளவான 31 செ.மீயை விட 9 விழுக்காடு குறைவாக 22 செ.மீ ஆக பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை சராசரி மழை அளவான 51 செ.மீக்கு 30 செ.மீ அளவில் மழை பெய்துள்ளது என தெரிவித்தார். புதுவை மாநிலத்தை பொருத்தவரை 53 செ.மீக்கு 33 செ.மீ மழையும், விழுப்புரம் 33 செ.மீக்கு 23 செ.மீ மழையும், பெரம்பலூர் 32 செ.மீக்கு 21 செ.மீ மழையும், அரியலூர் 35 செ.மீக்கு 19 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அதிக மழை பொழிவு அளவை பொருத்தவரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 33 செ.மீக்கு பதிலாக 44 செ.மீ மழையும், நெல்லை மாவட்டத்திற்கு 32 செ.மீக்கு 42 செ.மீ மழையும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 29 செ.மீக்கு 35 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது' என தெரிவித்தார்.
இதையும் படியுங்க: மழைநீரில் மீன்பிடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நூதனப் போராட்டம்!