ஊரடங்கின் காரணமாக விசைப்படகுகளின் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, மீன்பிடி தடை காலத்தினை மாற்றி அறிவிக்குமாறு தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும், பிற கடலோர மாநில மற்றும் யூனியன் பிரதேச மீன்வளத்துறை அமைச்சர்களுக்கும், மீன்பிடி தடை காலத்தினை மாற்றி அமைத்து ஆணையிடக்கோரி மத்திய அரசினை வலியுறுத்துமாறு கடிதங்கள் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற, மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, ”ஊரடங்கு காலத்தினை கருத்தில் கொண்டு, இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31ஆம் தேதி வரையான 47 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31ஆம் தேதி வரையான 47 நாட்களுக்கும், தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படும்“ என்ற திருத்திய ஆணையை வெளியிட்டுள்ளது.
இதனால், கரோனா நோய் கட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுத்தம் செய்துள்ள தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள், ஜூன் 1ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம். மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 61 நாளில் இருந்து 47 நாட்களாக மீன்பிடி தடை காலம் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அப்பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்.
இதையும் படிங்க: கரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: ஆட்சியர்களுக்கு உத்தரவு