மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள், 60 வயதுக்கு மேல் உள்ள ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்து தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.
இதனை மேற்கோள் காட்டி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி பழனிசாமியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி அரசுக்கு கோரிக்கை மனு அளித்தார். அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், பழனிசாமி 9 ஆண்டுகள் 24 நாட்கள் மட்டுமே தண்டனை அனுபவித்துள்ளதாகக் கூறி விடுவிக்க மறுப்பு தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கோவை சிறையில் விசாரணை கைதியாக இருந்த 349 நாள்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிட்டார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கடந்தாண்டு மே மாதம் பழனிசாமியை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சிறைத்துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில், "தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பு விசாரணைக் கைதியாக சிறையிலிருந்த காலத்தையும் தவறாகச் சேர்த்துக்கொண்டு பழனிசாமி கோரிக்கை வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து நீதிபதிகள், பழனிசாமியை விடுதலை செய்யக் கோரிய உத்தரவை ரத்து செய்து, அவரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய விண்ணப்பத்தை மறு பரிசீலனை செய்து எட்டு வாரங்களில் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளின்றி அரசு கட்டடங்கள் கட்டக் கூடாது'