கோயம்புத்தூர்: அறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமமுக கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்.
அண்ணா சிலையின் அருகில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ”அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து வீர அஞ்சலி செலுத்தி இருக்கின்றோம்”, எனக் கூறினார்.
பின்னர் அவரிடம் அதிமுக குறித்து கேள்வி எழுப்பிய போது, 'இன்னொரு கட்சியில் (அதிமுக) நடக்கும் கூத்தைப் பற்றி பதில்சொல்ல வேண்டியதில்லை. அது நீதிமன்றத்தில் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் .
எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம், ஒரு சிலரின் ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தால் சிக்கி இருக்கின்றது. இதற்குக் காலம் பதில் சொல்லும். எல்லாம் சரியாகிவிடும்' என்றார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர், 'தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரி சுமையை, மின் கட்டணத்தை ஏற்றி மக்களை துன்பப்படுத்துகின்றது. துன்பப்படுத்துவதுதான் திராவிட மாடல் என்பதை திமுக நிரூபித்து வருகின்றது. இதற்கு நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள்.
எந்த மொழியையும், எந்த மாநிலத்திலும் திணிக்கக்கூடாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களாக விரும்பி ஏற்றுக் கொள்ளாமல், திணித்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கரோனா பாதிப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்கட்டணம் மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வாட்டி வதைக்கும் வகையில் இருக்கக்கூடாது.
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஊழலை ஒழிப்போம். முறைகேடுகளை அனுமதிக்கமட்டோம் என்ற திமுகவின் வாக்குறுதிகளை மட்டும் செயல்படுத்தினால் போதாது. நீட் தேர்வு ரத்து, குடும்பப்பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், சொத்து வரிக் குறைப்பு எனப்பல்வேறு வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதனை நிறைவேற்ற வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது கோபம் அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைப்போல இந்த ஆட்சியும் மாறும். அண்ணா,பெரியார், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி திமுக அவர்களது குடும்பத்தை மட்டுமே வளர்த்து இருக்கின்றனரே தவிர, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்