சென்னை: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் (அக்.03) மதியம் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் தாம்பரத்தைச் சேர்ந்த அமீர் என்ற நபர் சென்ட்ரல் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாகக் கூறி அமீரின் விலாசம், தொலைபேசி எண் ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
இதனையடுத்து சந்தேகத்திற்குரிய நபர் கொடுத்த விலாசத்தின் அடிப்படையில் தாம்பரம் பகுதியைச்சேர்ந்த அமீர் என்ற நபரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் அமீர் தாம்பரம் பகுதியில் தனியார் தங்கும் விடுதி மேலாளர் என்பதும், அமீருக்கும் இச்சம்பவத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதையும் காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.
பின்னர் அழைப்பு வந்த செல்போன் எண்ணை காவல் துறையினர் டிராக் செய்து விசாரணை நடத்தியதில், அந்த செல்போன் எண் வேறு ஒரு பெண்ணுடையது எனத் தெரிய வந்தது. இதனால் குழப்பமடைந்த காவல் துறையினர், செல்போன் ஐ.எம்.இ.ஐ நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டதில் பூக்கடை பகுதியைச்சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது செல்போனில் இருந்து அந்த அழைப்பு வந்தது காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
அதனடிப்படையில் பூக்கடை பகுதியைச்சேர்ந்த ரவிச்சந்திரனை பூக்கடை காவல்துறையினர் கைது செய்து, அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரவிச்சந்திரன் ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், முன்னதாக அமீர் மேலாளராக உள்ள தனியார் தங்கும் விடுதியில் பணியாற்றி வந்ததும், அப்போது அமீருடன் தொடர்பிலிருந்த பெண் ஒருவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டு அப்பெண்ணுடன் நெருங்கிப் பழகி, திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் அப்பெண்ணுடன் பழகுவதை அறிந்த அமீர் தன்னை கண்டித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின் அமீர் தன்னை பணியிலிருந்து நீக்கிவிட்ட நிலையில், பூக்கடை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வருவதாகவும் விசாரணையில் காவல்துறையினரிடம் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், அமீர் மீது இருந்த கோபத்தில் அவரை பழிவாங்கவே இவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வெடிகுண்டு மிரட்டலுக்காக பயன்படுத்திய சிம் வேறொருவருடையதாக இருந்ததால், அதுகுறித்து காவல் துறையினர் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தியபோது, தான் மின்சார ரயிலில் பயணம் மேற்கொண்டபோது பயணி ஒருவர் விட்டுச்சென்ற செல்போனை எடுத்து செல்போனை தூக்கி எறிந்துவிட்டு அதிலிருந்த சிம்-ஐ எடுத்து அதைப் பயன்படுத்தி காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பேசியதாகவும் விசாரணையில் ரவிச்சந்திரன் காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சிதம்பரத்தில் தொடரும் குழந்தைத் திருமணங்கள்; மணமுடித்த தீட்சிதருக்கு வலைவீச்சு