சென்னை தி. நகரில் உள்ள தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார், முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் மிகச்சிறந்த தலைவரை, மனிதரை இழந்துவிட்டோம் என்றும் கட்சிப் பாகுபாடுகள் இல்லாமல் அனைவரோடும் ஒன்றாக பழகக்கூடியவர் மறைந்திருப்பது நாட்டிற்கே பேரிழப்பு எனவும் கூறினார்.
ஜிஎஸ்டியை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் ஜேட்லி, தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே செலவிட்டவர் என்று புகழாரம் சூட்டினார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த போதும் கூட சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களின் பிரச்சனைகளை தெரிந்துகொண்டு பதிலளித்துள்ளார் என்று தெரிவித்தார்.
அருண் ஜேட்லியின் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் தமிழிசை வேதனை தெரிவித்தார்.