சென்னை: பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின்கீழ், கட்டி முடிக்கப்படாத வீடுகள் குறித்த குறைகளை தீர்ப்பதற்கு மக்கள் குறைதீர் மையம் அமைக்கப்பட்டதாகவும் கடந்த 2016-17 ஆம் ஆண்டு முதல் அனுமதிக்கப்பட்ட வீடுகளில் பல்வேறு நிலைகளில் கட்டுமானத்தில் உள்ள வீடுகளினைக் கட்டி முடிக்க பயனாளிகளை தொடர்புக்கொள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் தாரேஸ் அகமது அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் வீடுகள் ஓதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் அனுமதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு சரியாக ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்காமல், சில ஊராட்சிகளில் வைத்து இருப்பதால் வீடுகளை கட்ட முடியாமல் ஒதுக்கீடு பெற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மத்திய அரசிற்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதற்கான புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முடியாதநிலையில் உள்ளனர்.
சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம்: குறிப்பாக, வீடு கட்டப்பட்ட இடத்தின் புவியியல் வரைப்படத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டியநிலை உள்ளது. வீடு கட்டுவதற்கு அளிக்கப்படும் நிதியும் போதுமானதாக இல்லை என்பது போன்ற காரணங்களால் இது குறித்த விவரங்களை, கிராமச்சபை கூட்டத்தில் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் எனவும்; அந்த பட்டியலை ஒட்ட வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் தாரேஸ் அகமது இன்று (ஆக.9) வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், சுதந்திர தினமான 15ஆம் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் .
கிராம சபையில் ஒப்புதல் பெற்றுகொள்ள வசதி: பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் எனப்படும் "ஆவாஸ் பிளஸ்" பட்டியலிலிருந்து 2021-22 ஆம் ஆண்டிற்கு 2,89,887 வீடுகள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அந்தந்த மாவட்டத்திற்கு ஊராட்சி வாரியாக, மத்திய அரசால் இலக்கு நிர்ணையம் செய்யப்பட்டதில் அனுமதி ஆணை வழங்கப்பட்ட பயனாளிகளின் பட்டியலையும், மீதம் வழங்கப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலையும் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறவேண்டும். பயனாளிகள் பட்டியல் ஊராட்சி மன்ற அலுவலக வெளிப்புறச் சுவற்றில், மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.
நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க அனுமதி ஆணை: நிரந்தர காத்திருப்போர் பட்டியல் மற்றும் "ஆவாஸ் பிளஸ்" பட்டியலில் உள்ள நிலமற்ற பயனாளிகள் எவரேனும், இடம் பெற்றிருப்பின் அவர்களை கண்டறிந்து வீட்டுமனைப் பட்டா வழங்கிட பணிக்குழுக்கள் மூலம் வீட்டுமனை பட்டா வழங்கும் வகையில் ஆட்சேபனை அற்ற, அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து பட்டா வழங்குவது தொடர்பாக விவாதிக்க வேண்டும். மேலும், நிலமற்ற பயனாளிகளை கண்டறிந்து எவரேனும் இருந்தால் நிலம் வழங்க அனுமதி ஆணை வழங்க கிராம சபையில் ஒப்புதல் பெறுதல்.
மக்கள் குறைதீர் மையம்: பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ், கட்டி முடிக்கப்படாத வீடுகளை விரைந்து கட்டி முடிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை, பொதுமக்களின் இத்திட்டம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இயக்கக அளவில் "மக்கள் குறைதீர் மையம்" அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் திங்கள் முதல் வெள்ளி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இயக்கத்தில் இருக்கும் .
புகார் எண்கள்: பொதுமக்கள் 8925422215 மற்றும் 8925422216 என்ற தொலைபேசி எண்ணிற்கு தங்களின் குறைகளை, நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், 2016-17 முதல் அனுமதிக்கப்பட்ட வீடுகளில் பல்வேறு நிலைகளில் கட்டுமானத்தில் உள்ள வீடுகளினை கட்டி முடித்திடும் பொருட்டு ஊக்குவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பயனாளிகளைத் தொடர்பு கொள்வார்கள் என்பதனையும் கிராம சபையில் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிராம மேற்பார்வையாளர் பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்டுவதற்கு லஞ்சம் - இளைஞர் தற்கொலை