சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மிதமான மழை, அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. சென்னை அம்பத்தூர் மற்றும் புறநகர்ப் பகுதிகளான திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்டப் பகுதிகளில் இரவு முழுவதும் கன மழை பெய்து வருகிறது.
இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து வீடுகளுக்குள் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. அம்பத்தூர், புதூர் பகுதியில் உள்ள பானுநகரில் இரவு நேரத்தில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதேபோல் அம்மா உணவகத்தில் மழைநீர் புகுந்துள்ளதால் பணியாளர்கள் சமையல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து இயல்பு வாழ்க்கைப் பாதித்துள்ளது.
ஆவடி வசந்த நகரில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் பட்டாபிராம் கோபாலபுரத்தில் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரிக்கும் நிலையில், மழை நீர் வெளியேற வழியில்லாமல் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். மழை நீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னைவாசிகள் கவனத்திற்கு - அடுத்த 24 மணி நேரத்துக்கு கன முதல் அதி கனமழை!