பொங்கல் பரிசுத் தொகையாக அரிசி அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து, ஜனவரி 4 ஆம் தேதி முதல் பரிசுத்தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த டோக்கனில் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக சின்னம் இடம்பெற்றுள்ளது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் வரிப்பணத்த்தில் செயல்படுத்தப்படும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தில், டோக்கன் மூலமாக அதிமுகவினர் சுய விளம்பரம் தேடிக்கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த டோக்கன்கள் ஆளுங்கட்சியினர் மூலமாக வழங்கப்படுவதால், அனைத்து பயனாளிகளுக்கும் இந்தப் பரிசுத் தொகை போய் சேராது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் இன்று முறையீடு செய்தார். அதன்படி வழக்கை நீதிபதிகள் விசாரித்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் இரு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டோக்கன் விநியோகிக்கப்பட்டதாகவும், கட்சியினர் ஆர்வ மிகுதியால் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் அரசின் அதிகாரப்பூர்வ டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
![அதிமுகவினர் அச்சடித்துக் கொடுத்த பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10060930_token-image.jpg)
மேலும், அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப்பொருள் மற்றும் பரிசுத்தொகை வழங்க வேண்டுமென ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனை பதிவு செய்த நீதிபதிகள், அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களை தவிர வேறு எந்த டோக்கனும் வழங்கக்கூடாது என அறிவுறுத்தினர். அரசின் சுற்றிறிக்கையை நாளை (டிச.31) மாலை 5 மணிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அவ்வாறு வெளியிடாவிட்டால் நீதிமன்றத்தை திமுக நாடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்கள் நலவாரியம் : தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!