சென்னை: அசானி புயல் எதிரொலியால் சென்னை மெரினா, பட்டினபாக்கம் கடற்கரைகளில் இன்று(மே 11)காலை கடல் சீற்றம் காணப்பட்டது. இதன் காரணமாக மெரினாவில் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அசானி புயல் காரணமாக நேற்று சென்னையில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது. இரண்டாவது நாளான இன்று சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த தீவிர சூறாவளி புயல் 'அசானி' கடந்த 6 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவிழந்து மே 11 ஆம் தேதி இன்று இரவு 2.30 மணி அளவில் மையம் கொண்டிருந்தது.
மேலும் மச்சிலிப்பட்டினத்திலிருந்து சுமார் 60 கிமீ தென்-தென்கிழக்கே (ஆந்திரப் பிரதேசம்), காக்கிநாடாவிலிருந்து 180 கிமீ தென்-தென்மேற்கே (ஆந்திரப் பிரதேசம்), விசாகப்பட்டினத்திலிருந்து 310 கிமீ தென்மேற்கில் (ஆந்திரப் பிரதேசம்), 550 கிமீ தெற்கு -கோபால்பூரின் தென்மேற்கு (ஒடிசா) மற்றும் பூரிக்கு (ஒடிசா) தென்மேற்கே 660 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
இது அடுத்த சில மணி நேரங்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா கடற்கரைக்கு அருகில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடைய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, இது வடக்கு-வடகிழக்கு திசையில் மெதுவாக மீண்டும் நகர்ந்து, மச்சிலிப்பட்டினம், நர்சாபூர், ஏனாம், காக்கிநாடா, துனி மற்றும் விசாகப்பட்டினம் கடற்கரைகளில் நகர்ந்து, இன்று மாலையில் வடக்கு ஆந்திரா கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் வெளிவர வாய்ப்புள்ளது.
பின்னர் அது வடகிழக்கு திசையில் வடமேற்கு வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது படிப்படியாக வலுவிழந்து மே 12ம் தேதி காலை ( நாளை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் சென்னையில் உள்ள மெரீனா கடற்கரையில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதையும் படிங்க:அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு