சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. 21 ஆம் தேதி முடிவுற்ற இப்போட்டியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த கிக் பாக்கசிங் வீரர் யோரா டாடோ(24) என்பவரும் கலந்து கொண்டார். இறுதி நாளன்று நடைபெற்ற போட்டியில் யோரா டாடோ, மஹாராஷ்டிரா மாநில வீரர் கேஷவ்முடேல்(21) என்பவரை எதிர்கொண்டார்.
அப்போது எதிர் அணி வீரர் கேஷவ் தாக்கியதில் யோரா தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன் தலைவர் சுரேஷ்பாபு உடனே, 108 ஆம்புலன்ஸ் மற்றும் பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் அங்கு வந்த போலீசார் காயமடைந்த வீரர் யோரா டாடோவை மீட்டு சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளித்து விட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அங்கு மருத்துவர்கள் யோராடாடோவுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் ஆபத்தான நிலையில் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வந்த யோரா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 14வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த தொழிலதிபர் ...